Last Updated : 30 Aug, 2021 08:09 PM

 

Published : 30 Aug 2021 08:09 PM
Last Updated : 30 Aug 2021 08:09 PM

15 மாதங்களுக்குப் பின் மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் இயக்கம்: முதல் நாளில் 552 பேர் பயணம்

மதுரை

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் 15 மாதங்களுக்குப் பின் இன்று இயக்கப்பட்டது. முதல் நாளில் 552 பேர் பயணம் செய்தனர்.

கரோனா ஊரடங்கையொட்டி அனைத்து ரயில்களையும் நிறுத்தியபோது, மதுரை- செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டது.

கட்டுபாடு விதிகளைப் பின்பற்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்கள் என்ற அடிப்படையில் இயக்கினாலும், பயணிகள் ரயில்கள் ஓடவில்லை. விருதுநகர், தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோயில், சிவகாசி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர் கள் மிக வசதியாக ஓடிய மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரை-செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத பயணிகள் ரயிலாக ஓட்ட மதுரை கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் மதுரை -செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை இன்று தொடங்கியது. காலை 7.10 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் காலை 10.35 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைந்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப்(15 மாதம்) பிறகு சேவை தொடங்கிய முதல் நாளான இன்று மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே 310, 21, 14, 4, 64, 28, 63, 11, 22, 6, 8, 1 பயணிகள் என, மொத்தம் 552 பேர் பயணம் செய்தனர்.

இவர்கள் மூலம் ரூ. 29,330 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிகுடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு ரூ. 30 ம், திருத்தங்கல் சிவகாசி ரயில் நிலையங்களுக்கு ரூ. 40 ம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு ரூ. 45 ம், ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு ரூ. 50 ம், சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு ரூ. 60 ம், பாம்பகோவில் சந்தை மற்றும் கடையநல்லூர் ரயில் நிலையங்களுக்கு ரூ. 65 ம், தென்காசி ரயில் நிலையத்திற்கு ரூ. 70 ம், செங் கோட்டை ரயில் நிலையத்திற்கு ரூ. 75 ம் விரைவு ரயில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடைந்தது. இதனிடை யே இந்த முன்பதிவு இல்லாத ரயில் சேவையைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் கூடுதலாக 3 கவுன்டர்கள் திறக்கப்பட்டடன.

தென்காசி பயணி ஒருவர் கூறுகையில் ‘‘ மதுரை - தென்காசி இடையே பஸ் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது இந்த ரயிலில் கட்டணம் ரூ.70 குறைவு தான் என்றாலும், ஏற்கனவே இந்த ரயிலில் மதுரை- செங்கோட்டைக்கு ரூ. 40 வசூலிக்கப்பட்டது. தற்போது, ரூ.75 வசூலிக்கப்படும் நிலையில், மீண்டும் பழைய கட்டணத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சிக்கவேண்டும்’’ என்றார்.

ஏற்கெனவே மதுரை கோட்டத்தில் மதுரை - விழுப்புரத்திற்கு பயணிகள் ரயில் (எக்ஸ்பிரஸ் கட்டணம்) ஓடும் நிலையில், மதுரை- செங்கோட்டை 2வது பயணிகள் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x