

காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசு மற்றும் அதைக் கண்டிக்காத மத்திய அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவின் மாநிலத் தலைவரும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி இன்று ( திங்கள் கிழமை) தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தண்ணீருக்காகச் சுற்றியுள்ள இதர மாநிலங்களை நம்பியிருந்து கையேந்தும் வகையில் கடைமடை மாநிலமாகத் தமிழகம் அமைந்துவிட்டது. இந்தச் சூழலில் தமிழகத்தைக் காக்கும் வகையில் பெருந்திட்டம் ஒன்றைச் செயல்படுத்த வேண்டும் என பாமக சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். நீரியல் வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, நம் மாநில மண்ணில் விழும் ஒவ்வொரு சொட்டு மழை நீரும் நம் மண்ணை வளப்படுத்த உதவும் வகையில் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் உரிமை, காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் உரிமை போன்ற உரிமைகளைக் காக்க தமிழகம் உறுதியாக நிற்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் வழங்குவதிலேயே சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு விதண்டாவாதம் செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இதே உறுதியுடன் தமிழக அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து நின்று மேகேதாட்டு அணைக்கு எதிரான நமது கருத்தை கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் விதமாக முழு அடைப்பு வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ அறப் போராட்டம் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிக கவனத்துடனும், கரோனா விதிகளை மீறாமலும் நடந்திட வேண்டும். பள்ளித் திறப்பின் மூலம் ஒரு குழந்தைக்குக் கூட கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடாத வகையில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிடுவதாகத் தகவல் வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு அவசரம் காட்டக் கூடாது. அவர்கள் சிறு குழந்தைகள் என்பதால் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும்.
சிறு தானிய உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்திருப்பதை பாமக சார்பில் வரவேற்கிறோம். தற்போதும் அதிமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வேறு வேறு கட்சிகளுடன் பாமக கூட்டணிக்குச் செல்வதாக விமர்சனம் செய்பவர்களுக்கு பாமக சார்பில், தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமலே உள்ள வேறு அரசியல் கட்சிகள் எது எனக் கூறுங்கள் என்ற ஒரு கேள்வியை மட்டும் முன்வைக்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது தருமபுரி எம் எல் ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மக்களை உறுப்பினர் பாரி மோகன், கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, சாந்தமூர்த்தி, அரசாங்கம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.