Published : 30 Aug 2021 05:06 PM
Last Updated : 30 Aug 2021 05:06 PM

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வார விழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) சென்னை, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக் குழுவினரின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பிரச்சார ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டு, வீடுகளுக்குக் கை பம்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்தார்.

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய ஏரி ஆதாரங்கள் / ஏரிகளைப் புதுப்பித்தல், நீர்நிலை மேம்பாடு, மறு பயன்பாடு, ஆழ்துளைக் கிணறு மீள் நிரப்புதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னர் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே உள்ள மழைநீர் கட்டமைப்புகள் புனரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் போன்றவை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தின் வாயிலாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவ்வாகனத்தில் ஓட்டு வீடுகள் மற்றும் கான்கிரீட் தள வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை எவ்வாறு உருவாக்குதல் என்பது தொடர்பான விவரங்கள், வரைபடங்கள், நீரினைக் குறைவாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் போன்றவை பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதற்கென்றே ”தண்ணீர் தன்னார்வலர்கள்” (Water Volunteers) குழு மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களிடையே கலந்துரையாடி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வார்கள்.

சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு / விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 200 பணிமனைகளில் தலா 2 உதவி மையங்கள் வீதம், மொத்தம் 400 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி மையத்திற்கு 5 மகளிர் சுய உதவிக் குழுவினர் வீதம் 400 உதவி மையங்களில் 2,000 உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 35,000 தெருக்களுக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த விவரங்களைத் தெரிவிப்பார்கள்.

விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுவினர் குடியிருப்புகளின் தன்மை, கிணறு வகைகள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பின் விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, குடிநீர் / கழிவுநீர் பற்றிய குறைகள் மற்றும் நீரில் உள்ள திடப்பொருட்களின் அளவு ஆகியவற்றைத் தெருக்கள் வாரியாகக் கேட்டறிந்து, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சா.விஜயராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x