

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து செப்.1-ம் தேதி முதல் 89,805 மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல இருப்பதாகக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் செப்.1-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளைச் செயல்படுத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி வளாகங்கள் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது எனப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்.1-ம் தேதி முதல் 61,589 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 89,805 மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவார்கள் எனக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னேற்பாடு பணி குறித்து புதுக்கோட்டை காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி இன்று ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
”தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி வளாகங்களை ஊரக வளர்ச்சித் துறையினர் மூலம் சுத்தம் செய்யப்படுவதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். அதற்குரிய கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறைக்கு அதிகபட்சம் 25 மாணவர்களை மட்டும் அமரவைக்க வேண்டும். பள்ளி வளாகத்திலும், வெளியிலும் சமூக இடைவெளியை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும்.
இதன்படி, 112 அரசு உயர்நிலைப் பள்ளி உட்பட 164 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 186 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 350 பள்ளிகளில் 9-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெற உள்ளன.
இப்பள்ளிகளில், சுமார் 61,589 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் சுமார் 89,805 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில், மாவட்டத்தில் அதிக மாணவ, மாணவிகளைக் கொண்ட சுமார் 40 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடக்கும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் அவரவர் பணிகளைக் கவனிப்பர்”.
இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.