Published : 30 Aug 2021 02:30 PM
Last Updated : 30 Aug 2021 02:30 PM

ஈழத் தமிழருக்குக் குடியுரிமை; தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சிக்க வேண்டும்- வீரமணி வேண்டுகோள்

சென்னை

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளை அளிக்காது, முந்தைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றுபவர் தமிழக முதல்வர். அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’ என்று உரத்த குரலில் முழங்கியது, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

மறுவாழ்வு விடுதிகள்

ஈழத் தமிழர்களுக்கு 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி, இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திட - அகதிகள் முகாம் என்பதில் ‘அகதி’யை அகற்றி, ‘‘மறுவாழ்வு விடுதிகள்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் முதல்வர் இலங்கைத் தமிழகர்களுடனான நமது உறவு தொப்புள்கொடி உறவு என்றும் அறுந்துபடாத - அறுக்கப்பட முடியாத - அறுக்கப்படக் கூடாத உறவு என்பதையும் உறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்துள்ளார். திராவிடம் என்பதுடன் ‘யாவரும் கேளிர்’ என்பதை வாழ்விலக்கணக்கமாக வாழும் வகை செய்யும் அருந்தத்துவம் என்பதைப் பிரகடனப்படுத்தி விட்டார்.

குடியுரிமை பெற்றுத் தருக

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தர, நமது தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிகமிக முக்கியமானதாகும். அதனையும் இலக்காக வைத்து அம்மக்களும் எம் மக்களே என்ற நிலையை உருவாக்குதல் முக்கியம்''.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x