Published : 30 Aug 2021 01:34 PM
Last Updated : 30 Aug 2021 01:34 PM

கரோனா விதிமீறல்; சென்னையில் 235 வாகனங்கள் பறிமுதல்: 606 வழக்குகள் பதிவு

சென்னை

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (29.08.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 364 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 7 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''கரோனா வைரஸ் நோய்த்தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21.06.2021 காலை முதல் 06.09.2021 காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகனத் தணிக்கைச் சாவடிகள் மற்றும் அனைத்துக் காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து, தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரக் காவல் குழுவினர் நேற்று (29.08.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 220 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 01 இலகு ரக வாகனம் என மொத்தம் 235 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 364 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கரோனா தொற்றைத் தடுக்க வேண்டும்''.

இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x