Last Updated : 30 Aug, 2021 01:21 PM

 

Published : 30 Aug 2021 01:21 PM
Last Updated : 30 Aug 2021 01:21 PM

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையையே கொடூரமாகத் தாக்கிய தாய் கைது

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நண்பரை நம்பவைக்க, பெற்ற குழந்தையையே கொடூரமாகத் தாக்கிய தாய் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (37). இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல் (4) மற்றும் பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே துளசி, கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கணவன் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பைக் கொடூரமான முறையில் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதில் வாய் மற்றும் முதுகிலும், உடலில் பல்வேறு இடங்களிலும் பலத்த காயம் அடைந்த பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் துளசி, சொந்த ஊரான ராம்பள்ளிக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே பெற்ற தாயே குழந்தையின் முகத்தில் கைகளாலும், செருப்பாலும், மிருகத்தனமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து துளசி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செஞ்சி அனைத்து மகளிர் நிலைய காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை, துளசியைக் கைது செய்ய இன்று காலை ஆந்திர மாநிலம் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட துளசியைத் தனிப்படை போலீஸார் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.15 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு துளசியிடம் குழந்தையைத் தாக்கியது தொடர்பாக செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் துளசிக்கும் சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் வீடியோ கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீடியோக்கள் மூலம் இருவரும் அடிக்கடி பேசிப் பழகியுள்ளனர். துளசியை பிரேம்குமார் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துளசியின் பெரிய மகன் துளசி போன்றே இருப்பதாகவும், இளைய மகன் துளசியின் கணவரைப் போன்று இருப்பதாகவும் பிரேம்குமார் கூறியுள்ளார். அதேபோல குறைப் பிரசவத்தில் பிறந்ததால் அவனை அடித்துத் துன்புறுத்த வேண்டுமென பிரேம்குமார் கூறியதால் துளசி இரண்டாவது மகனைத் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரியவந்தது.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக கொலை ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து துளசியைக் கைது செய்தனர். துளசி, செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குத் தூண்டுகோலாக இருந்த பிரேம்குமாரைக் கைது செய்ய தனிப்படை போலீஸார் சென்னை விரைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x