

தமிழகத்தில் ரூ.6,456 கோடி செலவில் 31 லட்சத்து 76 ஆயிரத்து 18 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் திட்டம் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, அண்ணா பிறந்த தினத்தில், திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் கூறும்போது, ‘‘கடந்த 2011-12 முதல் 2015-16 வரை இத்திட்டத்துக்காக ரூ.6 ஆயிரத்து 456 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 31 லட்சத்து 76 ஆயிரத்து 18 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 100 சதவீத இலக்கை அடைந்து திட்டம் நிறைவு பெற்றுள்ளது’’ என்றார்.
கூட்டத்தில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் கொ.சத்ய கோபால், தமிழ்நாடு மின்னணு நிறுவன நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.