Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

மதுரையில் மேம்பாலம் இடிந்தது தொடர்பாக என்ஐடி பேராசிரியர் தலைமையில் சிறப்பு குழு ஆய்வு: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் குழு ஒன்று ஆய்வு செய்ய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

மதுரையில் உள்ள நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில் 32 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாலத்துடன் கூடிய நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.545 கோடியில் அமைக்கப்படும் இச்சாலையில் நகர் பகுதியில் உள்ள அவுட்-போஸ்ட் முதல் செட்டிகுளம் வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணியை மும்பை ஜேஎம்சி என்ற கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மதுரை பேங்க் காலனி-நாகனாகுளம் இடையே அணுகு சாலைக்காக இணைப்புப் பாலம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக ராட்சத சிமென்ட் கான்கிரீட் தூண்கள் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 70 அடி உயரத்தில் இருந்து கான்கிரீட் கர்டர் இடிந்து விழுந்தது. இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ்சிங்(29) உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பறக்கும் பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சம்பவ இடத்தை நேற்று நேரில் பார்வையிட்டார். இணைப்பு கர்டர்கள் இடிந்து விழுந்தது குறித்து கட்டுமானப் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கண்காணிப்பில் பறக்கும் பாலப் பணி நடக்கிறது. இருப்பினும் தமிழக மக்கள் பயன்படுத்தப்போகும் பாலம் என்பதால் முதல்வரின் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்தேன்.

7.5 கி.மீ. தொலைவுக்கான பறக்குப் பாலம் பணியில் 5.9 கி.மீ. முடிவடைந்துள்ளது. 120 டன் எடையுள்ள கர்டரை 200 டன்னுக்கும் மேலான ஹைட்ராலிக் இயந்திரம் மூலமே தூக்க வேண்டும். இது சரியாகக் கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும், ஹைட்ராலிக் இயந்திரத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே இவ்விபத்துக்குக் காரணம். பொறியாளர்கள் மேற்பார்வையின்றி இப்பணி நடந்திருப்பதாகத் தெரிகிறது.

இதனிடையே மதுரை ஆட்சியர் மூலம் திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் என்பவர் தலைமையில் குழு ஒன்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தவறு நடந்தது எப்படி எனத் தெரியவரும். தவறு இருந்தால் தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநர் மூலம் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பணிக்கான பாதுகாப்பு நடைமுறைகளுக்காக ஜெய்ப்பூர் கம்பெனி ஒன்றுக்கு ஒப்பந்தம் தரப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது அக்கம்பெனியின் பொறியாளர்கள் இருந்தார்களா என ஆய்வு செய்யப்படும் என்றார்.

நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

3 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி அனில்குமார் கொடுத்த புகாரின்பேரில் கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பாளர் பிரதீப்குமார் ஜெயின், கட்டுமானப் பொறியாளர் சந்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் இயந்திர நிறுவனத்தின்பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீஸார் விபத்து உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x