

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொடி ஊர்வல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்துக்குள்ளேயே கொடி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்துவைக்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பேராலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. தொடர்ந்து, பேராலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஆட்சியர் அருண் தம்புராஜ், எஸ்.பி ஜவஹர், பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார், பங்குத்தந்தை அற்புதராஜ் அடிகளார், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம் அடிகளார், உதவி பங்குத்தந்தையர் டேவிட் தன்ராஜ் அடிகளார், ஆண்டோ ஜேசுராஜ் அடிகளார் மற்றும் அருட் சகோதர, சகோதரிகள், பேராலய பணியாளர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
செப்.8 வரை நடக்கும் விழாவில் காலையில் பல்வேறு மொழிகளிலும், மாலையில் கன்னடத்திலும் திருப்பலி நடக்கும். செப்.7-ல் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பெரிய தேர் பவனி நடைபெறும்.