

சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி விஜயா (40). இவரது மகன்கள் சந்தோஷ் குமார், கோகுல்ராஜ். கோபால் வீட்டின் அருகே அவரது உறவினர் கோவிந்தராஜ் (42) என்பவர் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டின் அருகே நின்று கூச்சல் போட்டுள்ளார்.
இதை விஜயா கண்டித்துள்ளார். அதற்கு கோவிந்தராஜ், விஜயாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் விஜயாவின் மகன் கோகுல்ராஜ் ஆகியோர் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில், கல்லால் தாக்கப்பட்ட விஜயா உயிரிழந்தார். அழகாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி கோவிந்தராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “தகராறின்போது கோவிந்தராஜ், கோகுல்ராஜை கல்லால் தாக்க முயன்றபோது அதை தடுக்க முயன்ற விஜயாவின் தலையில் கல் பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கைதான கோவிந்தராஜுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்” என்றனர்.