திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியரிடம் முன் அனுமதி கட்டாயம்: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்: கோப்புப்படம்
கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கோவையில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள், இதர நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன் அனுமதிபெற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் இன்று (ஆக. 29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் பரவிவரும் தொற்றின் தாக்கம் கோவை மாவட்டத்திலும் காணப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்‌, கரோனா தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்பும்‌ நேரத்தில், புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நிலை எழுந்துள்ளது. குறிப்பாக, இங்கு கடந்த 4 நாட்களாக கரோனா தொற்று விகிதம்‌ லேசாக உயர்ந்துள்ளதால், அது அதிகமாகாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என, அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி, இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் மூலம் விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in