

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பவினாபென் படேலை தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை இறுதி சுற்றில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில், 34 வயதான பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜாங் மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று (ஆக. 29) நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பவினா தனது உத்திகளை செயல்படுத்த முடியாமல் திணறினார். இருப்பினும், அவர் தளர்வடையாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார். 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் அவர் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இருப்பினும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பவினாபென் படேல்.
பவினாபென் படேலை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் மகள் பாவினாபென் படேலைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.