Published : 29 Aug 2021 02:41 PM
Last Updated : 29 Aug 2021 02:41 PM

ஈரோட்டின் அடையாளமாய் மாறிய இட்லி சந்தை

இட்லி விற்பனை

ஈரோடு

வரிசையாக பூக்கடைகள் அமைந்த மலர் சந்தையில், மாலைகள் அணிவகுத்து மணம் வீசும். ஈரோடு திருநகர் காலனியிலோ, இட்லிப்பானைகளில் இருந்து வெளியேறும் ஆவியும், சூடான இட்லியின் வாசமும் பசியை கூட்டி, நம்மை சாப்பிட அழைக்கிறது.

சர்வதேச அளவில் பிரியர்களைக் கொண்ட உணவான இட்லி விற்பனைக்கென தனிச்சந்தை இயங்குவது ஈரோட்டின் சிறப்புகளில் ஒன்றாய் மாறி நிற்கிறது.

ஆடம்பரம், அலங்காரம் ஏதுமில்லாமல், பிளாஸ்டிக் சேர், டேபிளோடு வரிசையாய் 10 கடைகள். அத்தனையிலும் அடுத்தடுத்து அவியும் ஆயிரக்கணக்கான இட்லிகளை வாங்க திரளும் கூட்டமும், சந்தை எனும் அடைமொழியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது இட்லி வியாபாரம். வீட்டில் தயாரித்து, பாத்திரத்தில் வைத்து, வீதிகளில் தலைச்சுமையாக எடுத்துச் சென்று விற்பனை செய்ததுதான் இந்த இட்லி சம்ராஜ்யத்தின் தொடக்கம். அருகில் நடந்த கால்நடைச் சந்தை வியாபாரத்தை மேலும் வளர்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மட்டுமல்லாது, மாவட்ட எல்லைகளைக் கடந்து ஈரோடு இட்லியின் பசியாற்றும் பயணம் விரிவடைந்துள்ளது.

ஈரோடு இட்லி சந்தை காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயங்குகிறது. இங்கு பாத்திரங்களோடு வந்து பார்சல் வாங்கிச் செல்வோர் அதிகம். பண்டிகை, விசேஷ நாட்கள், மொத்த ஆர்டர்கள் வரும் காலங்களில், இங்கு 20 மணி நேரமும் இட்லி தயாராகிக் கொண்டே இருக்கும். ஈரோட்டில் செயல்படும் பல உணவகங்களுக்கு இங்கிருந்து இட்லி செல்வதால், நாள் ஒன்றுக்கு இட்லி சந்தையில் 10 ஆயிரம் இட்லிகள் முதல் 20 ஆயிரம் இட்லிகள் வரை சர்வசாதாரணமாக விற்பனையாகிறது.

இட்லிக்கு சட்னி, காரச் சட்னி, குருமா என சைவம் மட்டுமே வழங்கப்படுகிறது. பல அசைவ உணவகங்களில் திருநகர் காலனி இட்லியையும், தாங்கள் சமைத்த சிக்கன், மட்டன் குழம்புகளையும் இணை சேர்ந்து சிறப்பு உணவாகவே விற்பனை செய்து வருகின்றனர். இட்லி தவிர வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியாரம், தோசை, ஊத்தாப்பம் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டாலும், இட்லிக்கு மட்டுமே பிரதான இடம் நிலைத்து நிற்கிறது.

திருநகர் காலனியில் இட்லிக்கடை நடத்தி வரும் மாதேஸ்வரனிடம் பேசியபோது, "ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை ரொம்ப பிரபலமானது. அந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளின் பசியைப் போக்கத்தான் 50 வருடத்துக்கு முன்பு இட்லிக்கடை ஆரம்பமானது. பசிக்கு சாப்பிட்டவர்கள் வீடுகளுக்கு பார்சல் வாங்கி செல்லவும் தொடங்கியதால், சந்தை விரிவானது. நாளடைவில் கால்நடைச்சந்தை இடம்மாறி, காவிரிக்கரைக்கு போனாலும், இட்லிக்கடைகள் எண்ணிக்கை அதிகமாகி சந்தையாக மாறியது" என்று பேசத் தொடங்கினார்.

இட்லி விற்பனை

இவரது மாமியார் தனபாக்கியம். 80 வயதைக் கடந்த இவர்தான், இப்பகுதியில் முதல் இட்லி கடையைத் தொடங்கியுள்ளார். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு, 25 பைசா விலையில், இட்லி விற்பனையை தனபாக்கியம் தொடங்கியுள்ளார். தற்போது மூன்றாவது தலைமுறையாக, இக்குடும்பத்தினர் இட்லி வியாபாரத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஈரோடு இட்லி உருவாகும் விதம், விற்பனை குறித்து விளக்கினார் மாதேஸ்வரன்.

"ஈரோட்டைப் பொறுத்தவரை வீட்டு விசேஷங்கள், கோயில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, கல்யாணம், காதுகுத்து, சீர் வரிசை என எந்த விசேஷமானாலும், மொத்தமாக இட்லி ஆர்டர் செய்வார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு விசேஷத்தில் இட்லி இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இட்லி தேவையைப் பொறுத்து இங்கேயே செய்வதா அல்லது அவர்கள் இடத்துக்குப் போவதா என முடிவு செய்வோம். மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில் விசேஷத்தின்போது, அங்கேயே சென்று ஒரு லட்சம் இட்லிக்கு மேலே ஊத்திக் கொடுத்திருக்கோம்.

கடந்த ஐந்து வருடமாக ஒரு இட்லி விலை ரூ 3.50. 2 சட்னி, சாம்பாரோட ரூ 6-ன்னு விலைக்கு விற்கிறோம். சில திருமண வீடுகளே இட்லி மட்டும் வாங்கிவிட்டு, சட்னி, சாம்பார் அவர்களே தயார் செய்து கொள்வார்கள்.

பொன்னி அரிசி, ஐ.ஆர்.20, இட்லி அரிசி, சாதா உளுந்து இதுதான் இட்லிக்கான தயாரிப்புப் பொருட்கள். இத்துடன், வெந்தயத்துக்குப் பதிலாக கொட்டமுத்து (ஆமணக்கு) சேர்த்துக்கறோம். விறகு அடுப்புலதான் இட்லியை வேக வைக்கிறோம். 20 கிலோ அரிசியை அரைத்தால் ஆறு அண்டா மாவு கிடைக்கும். இதுல 800 இட்லி வரை சுடலாம். இப்ப வெவ்வேறு வடிவங்களே இட்லி ஊத்த தட்டுக்கள் வந்திடுச்சு. அதனால, பல வெரைட்டியா இட்லியைக் கொடுக்க முடியுது" என்றார்.

பொடி, சாம்பார், 'குஷ்பு' இட்லியில் தொடங்கி, செட்டிநாடு, மங்களூர், காஞ்சிபுரம் இட்லி வகைகள், இளநீர், ரவா, ஜவ்வரிசி, சேமியா என வகைகளைத் தயாரிக்கும் திறனை இங்குள்ள கடைக்காரர்கள் பெற்றுள்ளனர். ஆனால், சிறப்பு வகை இட்லிகள் மொத்த ஆர்டரின் போது மட்டுமே கிடைக்கிறது.

சபரிமலை, பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மொத்தமாக இங்கு இட்லி வாங்கிச் செல்கின்றனர். மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, இங்கிருந்து சிலரை அழைத்துச் சென்று இட்லி சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். "கேரளா, கர்நாடகாவில் தொடங்கி டெல்லி உட்பட பல வடமாநிலங்களுக்கு இங்கிருந்து ரயில் மூலம் இட்லி கொண்டு போய் பறிமாறி இருக்காங்க. போய் சமைச்சுக் கொடுக்கணும்னா, அதுக்கான செலவையும் ஏத்துக்கணும். தரமான பொருட்களால் தயாரிப்பதால, ஒரு நாள் வரைக்கும் இட்லி மலர்ச்சியா இருக்கும். மீதமான மாவை, புது மாவுடன் கலப்பது, பழைய இட்லியை விற்பது போன்றவற்றில் நாங்கள் யாரும் காம்பரமைஸ் செய்து கொள்வதில்லை" என்கின்றனர், இட்லி விற்பனையாளர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவலால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லாததால் இட்லி விற்பனை குறைந்து போயுள்ளது. அதே நேரத்தில், ஆதிபராசக்தி மன்றம், ஈரோடு சிறகுகள் அமைப்பு போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இவர்களிடம் மொத்தமாக இட்லி வாங்கிச் சென்று உணவின்றி தவிப்பவர்கள், காப்பகங்களில் வசிப்போருக்கு கொடுத்து, இவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியுள்ளனர். அதேபோல், காரோனா ஊரடங்கு காலத்தில் காவல் பணியில் இருந்த போலீஸார், அரசு அலுவலர்கள் என பலரின் பசியையும் இவர்களின் இட்லி ஆற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x