5 ஆண்டுகளில் காரைக்காலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்: புதுச்சேரி பாஜக தலைவர் கருத்து
புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில், காரைக்காலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என, புதுச்சேரி பாஜக தலைவர் வி.சாமிநாதன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில், மவுனிகா நினைவு அறக்கட்டளை சார்பில், இலவச கணினி பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி இன்று (ஆக. 29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி பாஜக தலைவர் வி.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசுடன் இணக்கமில்லாத காரணத்தால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதல் முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வரியில்லாத பட்ஜெட்டாக இது உள்ளது.
கூடுதல் நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து, மூடிக் கிடக்கும் கூட்டுறவு நிறுவனங்கள், நூற்பாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக உள்ளன. 5 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் காரைக்காலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
பிரதமரின் ஆலோசனையின்படி பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்படையான, ஊழலற்ற அரசாக செயல்படும். பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய அரசாக அமையும்.
காரைக்காலில் புற வழிச்சாலை அமைக்கும் பணி, கோயில் நகரத்திட்டப் பணிகள் போன்றவை விரைவுப்படுத்தப்படும். சுகாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். காரைக்காலை பெரிய சுற்றுலாத் தலமாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நிச்சயம் மேற்கொள்வார்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய 'மனதின் குரல்' நிகழ்ச்சியை, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகில் மீனவர்களுடன் பாஜகவினர் கடலுக்குள் சென்று கொண்டே கேட்டனர்.
பாஜக மீனவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், புதுச்சேரி பாஜக தலைவர் வி.சாமிநாதன், காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன், இளைஞரணி பொதுச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
