

சேலம் பால் பண்ணையில் தினமும்2 டன் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் பிரிவு ரூ.8 கோடியில் நிறுவப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் தினமும் 100 டன் உற்பத்தி திறன் கொண்ட, கால்நடைத் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.25 கோடியில் நிறுவப்படும்.
சேலம் பால் பண்ணையில் தினமும் 2 டன் அளவில், இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் பிரிவு ரூ.8 கோடியில் நிறுவப்படும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ.3.80 கோடியில் மோர், பாக்கெட் தயிர்,கப் தயிர் தயாரிக்கும் பிரிவு நிறுவப்படும். அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருச்சி, கோவை பால் பண்ணைகளில் திரட்டுப்பால் (Condensed Milk) தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.
அம்பத்தூர் பண்ணையில் பால்பொருட்கள், சிப்பம் கட்டும் பொருட்கள், மூலப்பொருட்களுக்கான ஆய்வுக்கூடம், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், நுண்ணுயிரியல் பகுப்பாய்வுக்கான ஆய்வுக்கூட்டம் ரூ.10 கோடியில் நிறுவப்படும்.
பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க, ஆவின்முகவர்களை நியமனம் செய்யஒற்றைச் சாளரமுறை நடைமுறைப்படுத்தப்படும். இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை அமைப்புமூலம், பால் பவுடர், வெண்ணெய்போல இதர பால் பொருட்களும் விற்கப்படும்.
பால் பொருள் விலை மாற்றப்படும்
பால் பொருட்களின் விலையைஇதர நிறுவனங்களின் பால் பொருட்களின் விலையுடன் ஒப்பிட்டு விலைமாற்றியமைக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செயலிழந்த சங்கங்கள் புதுப்பிக்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணியிடங்களுக்கு, டிஎன்பிஎஸ்சி மூலம்ஆட்களை தேர்வுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கு சென்று, கால்நடைகளுக்கு இலவச, அவசர சிகிச்சை வசதிஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள், ரூ.6.80 கோடியில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.