

சட்டப்பேரவையில் நேற்று மீன்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அரசு மற்றும் தனியாரின் பங்களிப்பில் அமைக்கப்படும்.
பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு தேவையான இயந்திரங்கள் ரூ.9.60 கோடி மானியத்தில் வழங்கப்படும்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.5 கோடியில் தூர்வாரி, சீரமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் கொக்கிலமேடு, கடலூர் பெரியகுப்பம், கடலூர் சின்ன குப்பம், கடலூர் ஆளிக்குப்பம், பழைய நடுக்குப்பம், புதுநடுக்குப்பம், அங்காளம்மன் குப்பம், செம்மஞ்சேரி குப்பம், நரிக்காட்டுக்குப்பம், கோவளம் கிழக்குப் பகுதிகளில் ரூ.99 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
விழுப்புரம் ஏக்கியார் குப்பம் மீன் இறங்குதளம், அனுமந்தையில் புதிய மீன்இறங்குதளம் ஆகியவை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி அமலிநகர், ஜீவா நகர், ஆலந்தலை, மீனவர் காலனி, குலசேகரபட்டினம், பெரியதாழை, வீரபாண்டியா பட்டினம், மணப்பாடு கிராமங்களில் ரூ.71 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை, கீழமணக்குடி, மேல மணக்குடியில் ரூ79 கோடியில் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். மயிலாடுதுறை திருமுல்லைவாசல், புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்துதல் மற்றும் நேர்கல் சுவர் அமைக்கும் பணிகள் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கடலூரில் வெள்ளாறு முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி ரூ.30 கோடியில்மேற்கொள்ளப்படும். கடலூர், பெரியகுப்பம், புதுக்குப்பம், சி.புதுப்பேட்டையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவருடன் கூடிய புதியமீன் இறங்குதளங்கள் ரூ.25 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம், சிப்பிகுளம், கீழ்வைப்பார் ஆகிய கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 28 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.