

ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் பணிபுரியும் சுமார் 2 லட்சத்கது 50 ஆயிரம் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி விதிமுறைகள், ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 68 ஆயிரம் சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு சாப்பிடும் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.