

சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிட, வணிகர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு பணிகள் காரணமாக, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கவனம் செலுத்தவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வணிகர் சங்கங்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், அவற்றுக்கான மாற்றுப் பொருட்கள், விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம், கிடைக்கும் தண்டனைகள் குறித்து மாநகராட்சி சுகாதாரக் கல்வி அதிகாரி டி.ஜி.சீனிவாசன், காட்சி வழியில் விளக்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, “பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான சாக்லெட், பிஸ்கட், சிகரெட் போன்றவற்றின் மீதுள்ள பிளாஸ்டிக் உறைகளும் ஒருமுறை பயன்படுத்தக் கூடியவைதான். அதற்கும் தடை விதிக்க வேண்டும். வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட அரசு அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞரணி செயலாளர் டைமன்ராஜா வெள்ளையன் பேசும்போது, “வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வருவதை தடுக்க வேண்டும்” என்றார்.
திடக்கழிவு மேலாண்மை
தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சங்கரன் கூறும்போது, “நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்படவில்லை, குஜராத் மாநிலத்திலிருந்து இன்றும் சென்னைக்கு மெல்லிய பிளாஸ்டிக் வந்துகொண்டுதான் உள்ளது. எனவே தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் முடிவில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிளாஸ்டிக் தடையை வணிகர்கள் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காக இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை வணிகர்கள் கடைபிடிக்க போதிய அவகாசம் வேண்டும் என்றனர். அதனால் மாநகராட்சி சார்பில் 10 நாள் அவகாசம் வழங்கி, பின்னர் விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர்கள் மனீஷ் எஸ்.நார்னவரே, விஷூ மகாஜன், ஷரண்யா அரி, டி.சினேகா, தலைமைப் பொறியாளர் என்.மகேசன், மாநகர நல அதிகாரி எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.