ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் பார்வையிட்டார்

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சியை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். உடன் சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சியை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். உடன் சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணிமண்டப வளாகத்தில் ஓவியர் மணிவேலு வரைந்த தெய்வீக ஒவியங்கள் கண்காட்சியை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணிமண்டபம் உள்ளது. இங்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 24 முதல் வரும் செப். 20-ம் தேதி வரை தங்கியிருந்து சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார்.

இந்த நாட்களில், மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்கள் பார்வையிடுவதற்காக, சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனம் சார்பில் ‘இறை, இடம், இவர்’ என்ற பெயரில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி செப். 20-ம் தேதி வரை நடக்கிறது. இறைநெறி ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த 100-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியை காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் திறந்துவைத்தார். டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின் தலைவர் ஏஆர்ஆர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கண்காட்சியை காஞ்சிசங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். அவரிடம், எந்தெந்த கோயில் மூலஸ்தான ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்பதை ஓவியர்மணிவேலுவும், அவரது மகன்ஓவியர் ம.ஆறுமுகமும் ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினர்.

பின்னர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறும்போது, ‘‘பல்வேறு கோயில்களின் மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களை ஒரே நேரத்தில் நேரில் பார்த்ததுபோல தத்ரூபமாக வரைந்திருப்பது பாராட்டுக்குரியது. மகா பெரியவர் கடந்த 1964-ல் தெருக்கூத்து, மகாபாரதம், சங்கீதம் ஆகியவற்றை கிராமம்தோறும் எடுத்துச் சென்று பக்தி நெறியை வலுப்படுத்தினார். வியாச பாரதமாக இந்தியா உருவாக வேண்டும். அதுவே மகா பெரியவரின் கனவும்கூட. இயல், இசை, நாடகம், ஓவியம் போன்ற கலைகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்’’ என்றார்.

சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தில் இக்கண்காட்சி அக். 1, 2, 3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in