

சென்னையில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் கட்டிட அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெற கட்டிடஉரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் அதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தலைமைப் பொறியாளர் (நகரமைப்பு) மூலம் அனுமதிஅளிக்கப்படுகிறது. 10 ஆயிரம்சதுர அடிக்கு மேல் சென்னைபெருநகர வளர்ச்சி குழுமம்மூலம் திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கட்டிட அனுமதி பெற சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
மாநகராட்சி பெறும் கட்டிட அனுமதிக்கான விண்ணப்பம் மீதுஅலுவலர்களால் கள ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டணம் செலுத்துவதற்கான கேட்பு ரசீது அளிக்கப்படுகிறது. அந்த கேட்பு ரசீதை விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் தொகையை இணையதளத்தில் அல்லது கேட்பு வரைவோலை முறையில் செலுத்தியதும், இணையதளம் வழியாக கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது.
முறையாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக வெளிப்படைத் தன்மையுடன் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது.
மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் 5 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் பேரில் 30 நாட்களில் சம்பந்தப்பட்ட மண்டல செயற்பொறியாளரால் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, கட்டிட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டிட அனுமதி பெறுவது தொடர்பான புகார்களை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 90748 என்ற விழிப்பு அலுவலரின் வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.