

சியாச்சின் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வேலூர் பகாயத்தைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன் தொழு பகுதியைச் சேர்ந்த ஹவில்தார் எஸ்.குமார், மதுரை சொக்கதேவன் பட்டியைச் சேர்ந்த சிப்பாய் ஜி.கணேசன், கிருஷ்ணகிரி குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த சிப்பாய் என்.ராமமூர்த்தி ஆகியோர் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 3-ம் தேதி சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இவர்கள் சிக்கினர். இந்திய ராணுவம், 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இவர்கள் உடல்களை மீட்டுள்ளனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இறந்ததை அறிந்து துயரம் அடைந்தேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.