Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

50 ஆண்டுகால வைகை கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு: ரூ.20 லட்சத்தில் சமர் அணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு கிராமங்களுக்கு இடையோன 50 ஆண்டுகால வைகை கால்வாய் பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு கண்டனர். மேலும் அக்கால்வாயில் ரூ.20 லட்சத்தில் சமர் அணை அமைக்கப் படுகிறது.

மானாமதுரை அருகே 16 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய்கள் பாசன வசதி வகையில் கிருங்காகோட்டை வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது.

இக்கால்வாயில் செல்லும் தண்ணீர் முதலில் ராஜகம்பீரம் புதூர் கண்மாய்க்கு சென்று நிரம்புகிறது. பிறகு அங்கிருந்து செல்லும் கால்வாய் தீர்த்தான்பேட்டை என்ற இடத்தில் அன்னவாசல், கிளங்காட்டூர் கிராமங்களுக்கு தனித்தனியாகப் பிரிகிறது.

ஆனால், கிளங்காட்டூர் கிராமத்துக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்க அன்னவாசல் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து கிளங்காட்டூர் கண்மாய் பாசன சங்கத் தலைவர் துபாய் காந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவு பெற்றார்.

இதையடுத்து 2 கிராமங்களுக்கும் தண்ணீர் பிரிந்து செல்லும் வகையில் கால்வாயில் ரூ.20 லட்சத்தில் சமர் அணை கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதற்கு அன்னவாசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்சினை நீடித்து வந்த நிலையில், தமிழரசி எம்எல்ஏ வலியுறுத்தலை அடுத்து இரு கிராம மக்களையும் அழைத்து பேச ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.

சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில், வட்டாட்சியர் தமிழரசன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் சமர் அணை கட்ட இரு கிராம மக்களும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து 50 ஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு வந்ததால், கிளங்காட்டூர் கிராம மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர். மேலும் நேற்று அணை கட்டுவதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூமி பூஜை நடத்தினர்.

வட்டாட்சியர் தமிழரசன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த அணை 8 மீ. அகலத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தம் மூன்று மதகுகளில் 2 அன்னவாசல் கண்மாய்க்கான கால்வாயிலும், ஒரு மதகு கிளங்காட்டூர் கண்மாய்க்கான கால்வாயிலும் அமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x