Published : 27 Feb 2016 02:14 PM
Last Updated : 27 Feb 2016 02:14 PM

நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளர் நியமனத்தை ரத்து செய்க: வைகோ

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர்கள் பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேடான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய்; கல்லூரிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்; பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு 8 கோடி ரூபாயும் வசூலித்துக் கொண்டு இருப்பதைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், ஆலமரத்தில், தேநீர்க்கடைகளில் விவாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆட்சி அதிகாரத்தின் அந்திமக் காலத்தில்கூட ஆளும் கட்சியினர், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 180 இளநிலை பொறியாளர்கள் (JDO) பணி இடங்களுக்கு 13,500 பேருக்கு அவசர அவசரமாக அழைப்பு அனுப்பி, கண் துடைப்பாக ஒரு நேர்காணலையும் நடத்தி முடித்து விட்டனர். ஆளும் கட்சிக்கு நெருக்கமான அதிகாரிகள்தான் இந்த நேர்காணலை நடத்தி இருக்கின்றார்கள்.

குறிப்பாக, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் உறவினர்கள் மேற்பார்வையில்தான், முறைகேடான நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் உறவினர்கள் கோடிகளில் புரள்கிறார்கள்.

கடந்த ஆண்டும் இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறையை மாற்றி, அரசாணை மூலம் நேர்காணல் நடத்தினால்தான் லட்சக்கணக்கில் குவிக்கலாம் என்று ஆளும் கட்சி கொள்ளைக் கும்பல் துணிந்து இத்தகைய முறைகேடுகளில் இறங்கி உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறையில் ஓட்டுநர் பணி நியமனங்களுக்கு கையூட்டு பெற்றுத் தருமாறு மிரட்டியதால் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார்.

இதில் தொடர்புடைய வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்கு அனுப்பப்பட்டார். இதன் பின்னரும் தமிழக அரசு நிர்வாகத்தில் புறையோடிப் போன ஊழலைத் தடுக்க முடியவில்லை.

இத்தகைய வெட்ககரமான லஞ்ச ஊழல் அனைத்திற்கும் முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர்கள் பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேடான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையாக தேர்வு செய்ய வேண்டும்; இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சமூக நீதியையும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தவறினால், முறைகேடான பணி நியமனங்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x