

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணை, ஆய்க்குடியில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 5.20 மி.மீ., குண்டாறு அணையில் 4 மி.மீ., கருப்பாநதி அணையில் 3 மி.மீ., செங்கோட்டை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61.03 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 119.50 அடியாகவும் இருந்தது. மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. கரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் குற்றாலம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பாபநாசத்தில் 4 மி.மீ. மழை
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 4 மி.மீ., மணிமுத்தாறில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 87.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
சேர்வலாறு- 90.12 அடி (156 அடி), வடக்குபச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 11.15 (22.96), கொடுமுடியாறு- 27.75 (52.25).