Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை: விடுதிகளில் இருந்து மாணவிகள் வெளியே வரத் தடை

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி வளாகம் நேற்று வெறிச்சோடியிருந்தது. படம்:மு.லெட்சுமிஅருண்

திருநெல்வேலி

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கடந்த 16-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இக்கல்லூரியில் பயிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்திலுள்ள இரு விடுதிகளில் தங்கியுள்ளனர். முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஒரு விடுதியிலும், மற்ற மாணவிகள் இன்னொரு விடுதியிலும் தங்கியுள்ளனர். இதில் முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவிகள் இருக்கும் விடுதியிலுள்ள ஒரு மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்குள்ள மற்ற மாணவியருக்கும் கரோனா பரிசோதனை கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

நேற்றுமுன்தினம் வரையில் 12 மாணவிகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் திருநெல் வேலி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பாதிப்பு கண்டறியப் பட்டதை அடுத்து, கல்லூரி விடுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, பரிசோதனை மேற்கொள்ளாத மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், உள்நோயாளிகள் உள்ளிட்ட 300 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. அதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனால், மாணவிகள் மட்டுமின்றி சுகாதாரத்துறையினரும் நிம்மதி அடைந்தனர். அதேநேரத்தில், அங்குள்ள விடுதிகளில் இருந்து மாணவிகள் வெளியே செல்ல தடை நீடிக்கிறது. ஒருவாரத்துக்கு அவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இக் கல்லூரியில் மாணவ, மாணவி கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள பயணிகளுக்கு பரிசோதனை

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. திருநெல்வேலி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் முகாமிட்டு இப்பணிகளை மேற்கொள்கிறார்கள். பரிசோதனை மேற்கொண்ட பயணிகள் அனைவரும் பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x