Published : 28 Aug 2021 09:30 PM
Last Updated : 28 Aug 2021 09:30 PM

பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் பயிற்சி இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?- விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சர் உறுதி

மதுரை

‘‘போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்த திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

மதுரை நத்தம் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் விபத்து நடந்த பகுதியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டதாகக் கூறுவது தவறு. கட்டுமானப்பணியின்போது எதிர்பாராத ஒரு செயல் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஹைட்ராலிக் ஜாக்கியை வைத்து காங்ன்க்கீரிட் கர்டரை தூன்கள் மீது தூக்கி வைக்க முயற்சி செய்தபோது ஜாக்கி பழுதடைந்துள்ளது. கான்க்கீரிட் கர்டரை சாதாரணமாக தூக்கி தூன்கள் மீது வைத்திட முடியாது. அதற்காகதான் ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்படுகிறது. போதிய பயிற்சி, நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்பட்டதா, அது எதனால் பழுதடைந்தது, இந்த பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டதா? பராமரிப்பு குறைபாடா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இந்த விபத்தில் எழுகிறது. ஒப்பந்ததாரர்கள் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

உயிரிழந்த நபரின் வயது 24. அதனால், அவர் ஹைட்ராலிக் பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காமல் பார்க்க வேண்டும், ’’ என்றார்.

பால வேலை நிறுத்தம்: ஆட்சியர் உத்தரவு:

விபத்தை நேரில் பார்த்த மகேந்திரன் கூறுகையில், ‘‘ஒரு சொந்த வேலை விஷயமாக விபத்து நடந்த பகுதி அருகே நின்று கொண்டிருந்தேன். திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தத்துடன் பாலம் சரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.அடுத்தடுத்து அனைத்து பாலப்பகுதிகளும் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால், பதட்டமடைந்த மக்கள் அங்கிருந்து பாலம் இல்லாத பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடங்கள் விபத்து நடந்த பகுதியில் அருகே செல்ல மக்கள் தயங்கினர். கட்டுமானப்பணி சரியான கண்காணிப்பு இல்லாமல் அலட்சியமாகவே நடந்தது. தற்போது நடந்தவிபத்து ஒரு உதாரணம்தான். அதனால், கட்டுமானப்பணி முடிந்த பாலத்தின் அனைத்து பகுதிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ’’ என்றனர்.

தங்க கணேஷ் கூறுகையில், ‘‘மேம்பாலம் பணி கடந்த 2 மாதமாக சுத்தமாக நடக்கவில்லை. குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்தனர். மக்களும், வாகன ஓட்டிகளும், நத்தம் சாலையில் செல்லும் போது நரக வேதனையை அனுபவித்து வந்தோம். எதிர்கால பயனுக்காக அதனை சகித்து கொண்டோம். ஆனால், இப்போது கட்டும்போதே பாலம் இடிந்து விழுவதை பார்த்தால் எப்படி அதில் பயணம் செய்ய முடியும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய விசாரணை நடத்தி பாலம் தரமானதா? இல்லையா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், ’’ என்றார்.

நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலம் தரமாக கட்டப்படுகிறது. தூன்கள் மீது காங்கீரிட் கர்டரை தூக்கு நிறுத்தும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சரிந்து கீழே விழுந்தது. பராமரிப்பை வைத்துதான் பாலத்தின் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பாலம் சர்வதேச தொழில்நுடப்பத்தில் கட்டப்படுவதால் அதன் தரத்தின் சந்தேகம் தேவையில்லை, ’’ என்றனர்.

பாலம் விபத்தால் ஆட்சியர் அனீஸ் சேகர், தற்காலிகமாக பாலம் கட்டுமானப்பணியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

முழுவிசாரணை தேவை: எம்.பி.

விபத்தை நேரில் பார்வையிட்ட சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், ‘‘நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் துயரமானது. இதிலே இரண்டு விஷயங்களை கவனப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, இந்த வேலை நடந்து கொண்டு இருந்த பொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியது தான் விபத்துக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது. இவைகள் குறித்தும், விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்றகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x