

சேலத்தில் இருந்து மதுரைக்கு வரி ஏய்ப்பு செய்து ஏழு கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்த வணிகவரித் துறையினர், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தனர்.
சேலத்தில் இருந்து மதுரை நோக்கி வெள்ளி மற்றும் தங்க நகைகளை கார்களில் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச் சாவடியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து வந்த ஏழு கார்களை நிறுத்திச் சோதனையிட்டனர். இவற்றில் வெள்ளிக் கொலுசுகள் இருந்தது தெரியவந்தது.
கார்களில் ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்ததால் உடனடியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து போலீஸார் மதுரை, திண்டுக்கல் வணிக வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த வணிக வரித்துறை அதிகாரிகள் பாலகுமாரன், பசல் ஆகியோர் காரில் வந்த ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேலத்தில் இருந்து சுமார் 4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளி கொலுசுகளை மதுரைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வதாகக் கூறினர். வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்தற்கான முறையான வரி செலுத்திய ஆவணங்களைக் கேட்டனர். அவர்கள் காட்டிய ஆவணங்கள் போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்து வெள்ளிப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டுசென்றது உறுதிப்படுத்தப்பட்டது.
உடனடியாக வணிக வரித்துறை அதிகாரிகள் அனைத்து வெள்ளிப் பொருட்களையும் மதிப்பீடு செய்து இவற்றிற்கு முறையாகச் செலுத்தவேண்டிய வரியாக 15 லட்சம் ரூபாயை செலுத்த உத்தரவிட்டனர். அபராதம் செலுத்தியதை அடுத்து வெள்ளிப் பொருட்கள் காரில் வந்தவர்களிடம் வழங்கப்பட்டன.