வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி, டெல்லியில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை எதிர்த்து, பாஜக, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின், அத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in