

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து 8 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை பொது நல வழக்கு மைய தலைவர் கே.கே.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு செய்த தியாகத்தை யாரும் மறக்க முடியாது. ஆனால் இந்திய அரசு அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்கத் தவறிவிட்டது. இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் உயரிழந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் நேதாஜியின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நேதாஜியின் தியாகம் குறித்தோ, அவர் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் குறித்தோ இப்போதுள்ள இளைஞர்கள் பலருக்கு தெரியவில்லை. ஆனால் ஜப்பான் போன்ற பல்வேறு உலக நாடுகள் நேதாஜிக்கு உரிய கவுரவம் அளித்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் நேதாஜி குறித்த சில கோப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமான ராணுவ குறிப்புகளும் உள்ளது. ஆனால் அதில் சில முரண்பாடுகள் உள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், நேதாஜியை கவுரவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த முரண்பாடும் இருக்காது.
எனவே நேதாஜி நாட்டின் விடுதலைக்காக செய்த தியாகத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மிக உயர்ந்த பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். தலைநகர் டெல்லியில் மட்டுமில்லாது இதர மாநில தலைநகரங்களிலும் அவருக்கு நினைவு இல்லங்கள், புகைப்படக் கண்காட்சிகள் அமைக்க வேண்டும். நேதாஜி பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 27.1.16-ல் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நேதாஜியின் சுதந்திரப் போராட்ட தியாகத்தை விவரிக்க தேவையில்லை. விடுதலைக்காக அவர் ஆற்றிய சேவை மிகப்பெரியது. அதனால் இந்த மனுவின் தகுதிக்குள் நாங்கள் செல்லவில்லை. எனவே மனுதாரர் மத்திய உள்துறை செயலருக்கு கடந்த 27.1.16 அன்று அனுப்பிவைத்த கோரிக்கை மனுவை மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் இந்த உத்தரவின் நகலோடு, தனது கோரிக்கை மனுவை 2 வாரத்துக்குள் மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்துள்ளனர்.