உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேடயம் வழங்கி கவுரவித்தார். அருகில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.படம்: பு.க.பிரவீன்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேடயம் வழங்கி கவுரவித்தார். அருகில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 12 ஆண்டுகளில் மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் தீர்ப்பளித்தது இல்லை: பிரிவு உபசார விழாவில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெருமிதம்

Published on

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருந்தாலும் ஒருபோதும் மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பளித்தது இல்லை எனஉச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு உயர் நீதிமன்றத்தி்ல், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் பிரிவுஉபசார விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் சக நீதிபதிகள்,ஓய்வுபெற்ற நீதிபதிகள், மத்திய,மாநில அரசு வழக்கறிஞர்கள்,வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள் பங் கேற்றனர். விழாவில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு கேடயம், நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாழ்த்திப் பேசும்போது, ‘‘நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இந்த உயர் நீ்திமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவர் இதுவரை ஒரு லட்சத்து 3ஆயிரத்து 563 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்’’ என்றார்.

பின்னர் ஏற்புரை வழங்கி நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீ்ட்டுக்கு செல்லும் மணப்பெண், பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்புக்கு செல்லும் மாணவன் ஆகியோரின் மனநிலையில் நான் தற்போது இருக்கிறேன். வாழ்க்கை என்றாலே அதில்பிரிவும் இருக்கும் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை தற்போது நினைவுகூர விரும்புகிறேன். பிரிவுஎன்பது சற்று சிக்கலானதுதான். இருந்தாலும் நாம் முன்னோக்கிசெல்லும்போது பிரிவு என்பதுநிகழத்தான் செய்யும். ராமாயணத்தில் மன்னராக முடிசூடிய சுக்ரீவனுக்கு, அனைவரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என ராமபிரான்அறிவுரை கூறினார். அதேபோலஅனைவரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். சிறியவன், எளியவன் என யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. கடந்த 12 ஆண்டுகளில் நான், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்புஅளித்து இருந்தாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் தீர்ப்பளித்தது இல்லை’’ என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிவெ.ராமசுப்பிரமணியன் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷூம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in