Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

ரூ.2 ஆயிரம் கோடியில் 250 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 4 வழித்தட சாலைகளாக அகலப்படுத்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை

முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் 250 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைகள் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 4 வழித்தட சாலைகளாக அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அதற்கு பதில் அளித்துப் பேசியபோது, துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

மாவட்ட தலைமையிடங்கள், தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் 2,200 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழித்தட சாலைகளாகவும், 6,700 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 2 வழித்தட சாலைகளாகவும் முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்படும். முதல்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 250 கி.மீ. நீள சாலைகள் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழித்தட சாலைகளாகவும், 600 கி.மீ. சாலைகள் ரூ.1,200கோடியில் 2 வழித்தட சாலைகளாகவும் அகலப்படுத்தப்படும்.

1,281 பழைய தரைப்பாலங்கள் ரூ.2,401 கோடியில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். முதல்கட்டமாக 648 தரைப்பாலங்கள் ரூ.609 கோடி செலவில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

திருச்சி, மதுரையில்..

திருச்சியில் தலைமை தபால்நிலையம் முதல் நீதிமன்ற ரவுண்டானா வரையும், ஓடத்துறை காவிரி பாலம் மல்லாட்சிபுரம் வரையும் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மதுரையில் நெல்பேட்டை முதல் அவனியாபுரம் புறவழிச்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை - சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் ரூ.56 கோடியில் மேம்பாலம் கட்டப்படும். மவுன்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் ரூ.403 கோடியில் கீழ்பாலம் கட்டப்படும்.

ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளசாலைகள் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் பணிதொடங்கப்படுவதால் ராஜீவ் காந்திசாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும்.

பொதுப்பணித் துறையின் சென்னை, திருச்சி மண்டலங்கள் சீரமைக்கப்பட்டு கோவையை தலைமையிடமாகக் கொண்டு கூடுதலாக ஒரு மண்டலம் உருவாக்கப்படும்.

டெண்டர் முறையில் மாற்றம்

ஒப்பந்தக்காரர் பதிவு ஆண்டுக்கு ஒருமுறை பதிவு என்பது இனிமேல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுஎன மாற்றப்படும். ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலைப்பணியை மொத்தமாக எடுக்கும்தொகுப்பு ஒப்பந்தப்புள்ளி நடைமுறை (பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம்) ரத்து செய்யப்படும்.

கட்டுமான பணிகளில் ரூ.15 கோடிக்கு உள்ளான சிவில், மின்பணிகளுக்கு தனித்தனி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதியமாவட்டங்களில் தலா ரூ.7 கோடியில்புதிய சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x