மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எம்.அப்துல்லா, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலருமான கே.சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எம்.அப்துல்லா, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலருமான கே.சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு உறுப்பினர் பதவிக்கான மாநிலங்களவைத் தேர்தல்- திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல்

Published on

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா நேற்று முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த 2019 ஜூலையில் அதிமுகசார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் செப்.13-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கை கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. முதல்நாளில் பத்மராஜன், அக்னிராமச்சந்திரன், மதிவாணன் ஆகிய 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எம்.அப்துல்லா, தலைமைச்செயலகத்தில் நேற்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல்நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போது திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

மாநிலங்களவையின் ஒரு உறுப்பினர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் ஆளும் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வெற்றி உறுதியாகியுள்ளது.

இதனால் பிரதான எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை. எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் 3 சுயேச்சைகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும்.

வரும் 31-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். செப்.1-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். போட்டி இருந்தால் செப்.13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in