

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசிஆகிய 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் உள்ளசட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு வாக்காளரின் பெயரும் விடுபடாமல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல், இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து கடந்த மார்ச் 19-ம்தேதி வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின்படி தயாரிக்கப்படுகிறது. இது கிராம ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் ஆகஸ்ட் 31-ம்தேதி வெளியிடப்பட உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பேரவைதொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து, அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும்.அதன் பின்னரே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராமஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.