

டெய்லர் ஒருவரிடம் ரூ.10 லட்சம்பறித்த வழக்கில் ஒன்றரை மாதத்துக்குப் பின்பு மதுரை பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இவரது உறவினரையும் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த கொங்கன் மகன் அர்ஷத். இவர் புதிதாக பேக் கம்பெனி தொடங்குவதற்கு பொருட்கள் வாங்க ஜூலை 5-ம்தேதி ரூ.10 லட்சத்துடன் மதுரை வந்தார். கூடுதல் பணம் தேவைப்பட்டதால் ஒருவரை பார்க்க நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அருகே காத்திருந்தார்.
அப்போது மதுரையைச் சேர்ந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் அர்ஷத்தை அச்சுறுத்தி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தைப் பறித்துச் சென்றனர்.
காவல் நிலையத்துக்குச் சென்று அர்ஷத் பணத்தைக் கேட்டும் காவல் ஆய்வாளர் வசந்தி தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக அர்ஷத் ஜூலை 27-ம் தேதி மதுரை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார்.
5 பேர் மீது வழக்குப்பதிவு
எஸ்பி உத்தரவின்பேரில் காவல்ஆய்வாளர் வசந்தி உட்பட 5 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவுடிஎஸ்பி ரவிக்குமார் தலைமையிலான தனிப்படையினர் பால்பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் என்ற சீமைச்சாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான காவல் ஆய்வாளர் உட்பட இருவரை தேடினர்.
அதேநேரத்தில் காவல் ஆய்வாளர் வசந்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த வசந்தியை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் காவல் ஆய்வாளரின் உறவினர் குண்டு பாண்டிராஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.