

பொள்ளாச்சி: கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பள்ளியில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் சுகாதாரத்துறை செவிலியர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “மதியம் 2 மணிக்கு தடுப்பூசி செலுத்துவதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் மாலை 4 மணிக்குதான் மருந்து கொண்டுவந்தனர். தடுப்பூசி முகாமுக்கு கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் போதிய வசதிகளை செய்து தரவில்லை. மின்விளக்கு வசதி இல்லாததால் செவிலியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக செல்போன் வெளிச்சத்தில் இரவு 7.30 மணிவரை தடுப்பூசி செலுத்தினர்” என்றனர்.