Published : 29 Jun 2014 01:11 PM
Last Updated : 29 Jun 2014 01:11 PM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: முதல்வர் நிவாரண நிதியுதவி அறிவிப்பு

மவுலிவாக்கம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கம் கிராமத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளது பற்றிய தகவல் அறிந்தவுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.

உடனேயே கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா, வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர், டி.எஸ்.ஸ்ரீதர், இ.ஆ.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், இ.கா.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன், இ.ஆ.ப., மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவு படுத்தினர்.

மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை வழங்கிட சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் அனுப்பப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், எனது உத்தரவின் பேரில், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தேவையான மருத்துவ அலுவலர்களும், உதவியாளர்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் உள்ளனர். தேவையான எண்ணிக்கையிலான தீயணைப்பு வாகனங்கள், அவசர மீட்பு ஊர்திகள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை கண்டறியும் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனது உத்தரவின் பேரில் அனைத்துத் துறையினரும் துரித நடவடிக்கை எடுத்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக இதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 21 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தில் பத்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் அவரவரது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இடிபாடுகளில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு உயிருக்குப் போராடிய தொழிலாளர்களை மீட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடிபாடுகள் முழுவதையும் விரைவில் அகற்றி இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தக்க சிகிச்சை அளிக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x