சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Updated on
1 min read

சென்னையைச் சுற்றியுள்ள 5 இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுங்கச்சாவடிகளில் வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது.

வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அவரை நேரில் சந்தித்து பேசவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும்‘‘ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in