ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளுக்குள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை

ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளுக்குள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை
Updated on
1 min read

ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளுக்குள் அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்த்து வைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை பொறுத்தவரை ஜெயலலிதா குலதெய்வமாக பூஜிக்கப்படுகிறார். நானெல்லாம் அவரது நிழலில் மட்டுமே வளர்ந்தவன். 2016 செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது விரைவில் தேறி விடுவார் என்றுதான் நம்பினோம். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது.

கடந்த 2017 பிப்ரவரி 7-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது. என் தலைமையில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.

2017 ஆகஸ்டில் அதிமுக அணிகள் இணைந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. அதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 90 சதவீத விசாரணை முடிவுற்ற நிலையில் 2019 ஏப்ரலில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவிடப்பட்டதுதான் மிச்சம்.

ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு , உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவார்கள்.

எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிகவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்யவும், அதன்மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் முதல்வர் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in