

சென்னை அரசு பொது மருத்துவமனையில், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் கரோனா தடுப்பூசி போடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவமனைகளில் சென்னை அரசு பொது மருத்துவமனையும் ஒன்று. அதன் தொடர்ச்சியாக தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இங்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 75 ஆயிரம் பேருக்கு இங்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்று தமிழக அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல், முதல் தவணை போட்டுக் கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி போட தவறுபவர்களும் அதிக அளவில் உள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களை அலைக்கழிப்பார்களோ என்ற எண்ணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். அவர்களுக்காக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவிலேயே தடுப்பூசி போடும் வசதியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். சிகிச்சைக்கு வரும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகளை தொடர்புடைய மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில் முதன்முறையாக இந்த மருத்துவமனையில் இத்தகைய வசதியை தொடங்கியுள்ளோம். அனைத்து சிகிச்சைப் பிரிவுகளிலும் இதனை விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.