

தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவுரயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையைக் கருத்தில்கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578),முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை,இந்த சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும். இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக. 28) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
மின்சார ரயில் சேவை மாற்றம்
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே நாளை (ஆக. 29) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.50 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1, 1.20, 2 மணி, தாம்பரம் 11.30, 12.20, 12.40, 1.40, 2.20 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து அவை இயக்கப்படும்.
மேலும், தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20, 11.30, மதியம் 12.10, 12,30, 1.50 காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25 ஆகிய மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.