

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதிய அரசு கல்லூரி அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக மணப் பாறை தொகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் முக்கி யமான தொகுதிகளில் ஒன்றாக இருப்பது மணப்பாறை. மாட்டுச் சந்தை, முறுக்குக்கு பெயர் போன இந்த தொகுதி நிலத்தடி நீர் அதிகம் இல்லாத வானம் பார்த்த பூமியாகும். கிராமப்புறங்கள் நிறைந்த இந்த தொகுதியில் பெரும் பாலானோர் ஏழை, எளிய குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, திருவெறும்பூர், லால்குடி, இனாம்குளத்தூர் ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மணப்பாறையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தனி கல்வி மாவட்டம் ஆகியவை உள்ள போதிலும், இங்குள்ள மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்த பின்னர் உயர்கல்வி பயில்வதற்கு திருச்சிக்கு தான் செல்ல வேண்டி யுள்ளது. மணப்பாறை தொகுதி ஏறத்தாழ 40 கிலோ மீட்டர் சுற்ற ளவு கொண்டது. இதன் எல்லை யிலிருந்து ஏறத்தாழ 85 கிலோ மீட்டர் பயணித்து தான் திருச்சி யில் உள்ள கல்லூரிகளுக்கு வர வேண்டும். இதன் காரணமாகவே இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பயில முன்வருவதில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழகத்தில் 10 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பில் மணப்பாறை இடம் பெறவில்லை. இதனால் மணப்பாறை தொகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
இதுகுறித்து மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, ‘‘மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை இடம்பெற்றிருந்ததால், அது நிறைவேறிவிடும் என நம்பியிருந்தோம். ஆனால், அமைச் சரின் அறிவிப்பில் மணப்பாறை இடம்பெறாதது ஏமாற்றம் அளிப் பதாக அமைந்துள்ளது’’ என்றனர்.
| முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று, கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா முடக்கத்தின்போது, வீட்டு வாசல்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள் கோரிக்கை அட்டையைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 10 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார், ஆனால், அதில், மணப்பாறை இடம் பெறவில்லை. எனவே, அங்கு கலை அறிவியல் கல்லூரியை நடப்பாண்டிலேயே தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். |