

கே. சுரேஷ்/ ஜெ. ஞானசேகர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி நிகழாண்டு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டுவிமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை. விநாயகர் சிலை கரைப்பதற்கு அரசு அனுமதி அளிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் தொழிலாளர்களின் வீடு, தொழிற்கூடங்களில் தேங்கியுள்ளன. அதில், ஏராளமான சிலைகள் சேதமடைந்து, வீணாகிவிட்டன.
எனினும், நிகழாண்டு செப்.10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை கரைப்புக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துவரடிமனையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் ஜி.சங்கர் கூறியது: கடந்த ஆண்டு சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படாததால் ஆர்டர் கொடுத்தவர்கள்கூட சிலைகளை எடுத்துச் செல்லவில்லை. நிகழாண்டும் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளனர். கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நிகழாண்டு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
சிறிய சிலைகள் தயாரிப்பு
திருச்சி மாவட்டத்தில் மேல கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் செக்போஸ்ட், சமயபுரம் பழூர் ஆகிய இடங்களில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.
கரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பெரிய சிலைகளுக்கு ஆர்டர் கிடைக்காததால், வீடுகளிலேயே வைத்து வழிபடும் வகையில் சிறிய விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மேல கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த க.ஜெய்சங்கர் கூறியது:
எங்களிடம் திருச்சி மட்டுமின்றி கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வர். ஆனால், கரோனா ஊரடங்கால் கடந்தாண்டு ஆர்டர்கள் இல்லாத நிலையில், நிகழாண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே, வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் ஒரு அடி முதல் இரண்டரை அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகிறோம். இதற்கும் இதுவரை வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர் வரவில்லை.
இருப்பினும், நம்பிக்கையுடன் சிலைகளைத் தயாரித்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருமானம் கிடைக்கும் இந்தத் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாத எங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றார்.
கே. சுரேஷ்/ ஜெ. ஞானசேகர்