

தமிழகம் மின் மிகை மாநிலம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியது அபத்தமானது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற தலித்துகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி, மரக்காணம், விழுப்புரம் சேஷசமுத்திரம், மயிலாடுதுறையை அடுத்த திருநாள்கொண்டச்சேரி என பல இடங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. சாதி ஆணவ கொலைகள் அரங்கேறின. நிலைமை இப்படி இருக்கையில் தமிழகம் அமைதிப்பூங்கா என்பது அப்பட்டமான பொய்யாகும்.
மேலும், தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் சரியான அளவில் மின்சார விநியோகம் இல்லை. விவசாயிகள் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மின் வாரியத்துக்கு உள்ள கடனை செலுத்த முடியாமல் தமிழக அரசு திணறுகிறது. இந்த சூழலில், தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என்பது அபத்தமான பேச்சாகும். இதனை மக்கள் நலக் கூட்டணி கடுமையாக கண்டிக்கிறது'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.