

பாலாற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர், தனியார் தோல் தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சர்வன்(11). காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் விண்ண மங்கலம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் பாலாற்றில் கலந்து ஓடியது. இதை வேடிக்கை பார்க்க சர்வன் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார். அப்போது, பாலாற்றில் தண்ணீர் ஓடுவதை பார்த்ததும், சிறுவர்கள் நீரில் இறங்கி குளிக்க தொடங்கினர்.
அப்போது, மணல் கடத்தல் காரர்களால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய சர்வன் நீரில் மூழ்கி மூச்சுத் திணறினார். இதைக்கண்ட சக நண்பர்கள் கரைக்கு ஓடி வந்து பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள், உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாலாற்றில் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி சர்வனை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.