Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM
சாக்லெட் கம்பெனியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றஞ்சாட்டிய கிராமமக்கள் திருப்பத்தூர் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் அனேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்களாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ‘வெங்களாபுரம் ஆறு உள்ளது. இந்த ஆறு ராட்சமங்களம், அனேரி, புலிக்குட்டை, கொரட்டி வழியாக பாம்பாற்றுக்கு செல்கிறது. பல ஆண்டுகளாக இந்த ஆற்று நீரை அடிப்படையாக கொண்டே அப்பகுதி மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அப்பகுதியில் சாக்லெட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த சாக்லெட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெங்களாபுரம் ஆற்றில் கலப்பதால் ஆற்றுநீர் கெட்டுப்போனதாகவும், அதன் மூலம் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெங்களாபுரம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளது. அங்கு கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அனேரி உட்பட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணியளவில் திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “வெங்களாபுரம் பகுதியில் அமைந்துள்ள சாக்லெட்தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளாக இது நடக்கிறது.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆற்றை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராமிய காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆற்றில் சாக்லெட் கம்பெனியின் கழிவு நீர் கலக்காதபடி மாற்று நடவடிக் கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்க மறுத்த பொதுமக்கள் சாக்லெட் கம்பெனிக்கு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்து கம்பெனியை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் 2 நாட்களில் தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் மற்றொரு போராட்டம் நடத்துவோம் எனக்கூறிவிட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT