

மத்திய அரசின் கல்வி நிலையங் களில் சமஸ்கிருதத்தை 3-வது மொழிப் பாடமாக திணிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான கல்வி ஆலோசனைக்குழு கூட்டம், டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய ஸ்மிருதி இரானி, “ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தை கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3-வது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வியாண்டு முதல் (2016-17) மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்படும். 8 முதல் 12-ம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வி கொண்டுவரப்படும்” என்று கூறியுள்ளார்.
கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூறும்போது, “மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சமஸ்கிருத மொழி நூல்களும் விரைவில் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருப்பதும், வழக்கிழந்ததுமான சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் பன்முகத் தன்மையையும், பல கோடி மக்களிடையே உயிரோட்டத்துடன் இருந்து வரும் மொழிகளையும், அவற்றுக்கான உரிமைகளையும் பாதுகாக்க, இப்பிரச்சினையில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.