என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி ஆட்சியிலும் புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக ஜான்குமார் தேர்வு
என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி ஆட்சியிலும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸுக்கு முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா ஆகிய பதவிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒதுக்கப்பட்டன. அதேபோல் பாஜகவுக்குப் பேரவைத் தலைவர், இரு அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
அனைத்துப் பதவிகளும் நிரப்பப்பட்ட நிலையில் இன்று முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக காமராஜ் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்தார். அதன்படி அவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த காங்கிரஸ்-திமுக ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து அப்போதைய முதல்வர் நாராயணசாமியிடம் நெருக்கமாக இருந்த ஜான்குமாருக்கு முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் பதவி தரப்பட்டது. அமைச்சர் பதவி கேட்டுக் கிடைக்காமல் இருந்த நிலையில், ஆட்சி நிறைவடைய உள்ள சூழலில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பின்னர் பாஜகவில் இணைந்து வென்றார்.
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கோரியிருந்த சூழலில் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. ஜான்குமார் ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால்., ஜான்குமாருக்கு பதிலாக, பாஜகவில் சாய் சரவணக்குமாருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஜான்குமார் டெல்லி சென்று கடும் முயற்சி செய்தும் பலன் தராததால் அமைதியானார். அதையடுத்து தற்போது அவருக்குக் கடந்த ஆட்சியில் அளித்த அதே பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
