பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கோவை அருகே பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்த வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

கோவை அருகே பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்ததாக, சில இளைஞர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், காவல் துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து, பொள்ளாச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ச்சியாக மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜோதி நகர் ரிஸ்வான் (எ) சபரிராஜன், பக்கோதிபாளையம் வசந்தகுமார், சூளேஸ்வரன்பட்டி சதீஷ், ஆச்சிப்பட்டி மணிவண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு, 2019 ஏப்ரல் மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கடந்த ஜனவரி 5-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கின் விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்.

இச்சூழலில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வேகமெடுத்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் அருண்குமார் என்பவரை 9-வது நபராக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் முன்னதாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீது, 2019-ம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அருளானந்தம் உட்பட 4 பேரைச் சேர்த்து கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 27) தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in