Published : 27 Aug 2021 14:23 pm

Updated : 27 Aug 2021 14:23 pm

 

Published : 27 Aug 2021 02:23 PM
Last Updated : 27 Aug 2021 02:23 PM

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்: வைகோ

vaiko-urges-government-college-of-arts-and-sciences-to-be-set-up-at-manapparai
வைகோ: கோப்புப்படம்

சென்னை

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஆக. 27) வெளியிட்ட அறிக்கை:


"மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர், ஊற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மணப்பாறை முறுக்கும், மாட்டுச் சந்தையும் மாநிலம் முழுமையும் புகழ்பெற்றது. தமிழ் மொழி காக்க, ஆதிக்க இந்தியை எதிர்த்து, மணப்பாறை ரயில் நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

1928 இல், 'திருக்குறள் தீபாலங்காரம்' என்னும் அரிய உரை நூலைத் தந்த மருங்காபுரி ஜமீன்தாரினி கி.சு.வி.லட்சுமி அம்மணி வாழ்ந்த ஊர்; தமிழ் செம்மொழி என அறிவிக்கத்தக்க ஆவணங்களைத் திரட்டி, கருணாநிதிக்கு, உதவியாகத் திகழ்ந்த மணவை முஸ்தபா படித்து வளர்ந்த நகரமான மணப்பாறை பகுதியில் வாழ்கின்ற மக்கள், தொகுதியின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து, கல்லூரிப் படிப்புக்கு, திருச்சிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று, கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா முடக்கத்தின்போது, வீட்டு வாசல்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள் கோரிக்கை அட்டையைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்; மணப்பாறைக்குக் கல்லூரி வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.

அவர்களது நியாயமான கோரிக்கைக்கு நானும் ஆதரவு தெரிவித்து, அரசுக் கல்லூரி அமைத்திட வலியுறுத்தி, நாளிதழ்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அப்போதைய முதல்வர் மணப்பாறைக்கு வந்தபோது, மதிமுகவின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் கைது ஆனார்கள்.

மணப்பாறை மக்களின் பல ஆண்டுக் கோரிக்கையை உணர்ந்து, அரசு கல்லூரி அமைக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

உயர்கல்வித் துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்புகளில், தமிழகத்தில் திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, சேர்க்காடு ஆகிய ஊர்களில் இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்று நன்றி தெரிவிக்கின்றேன்.

அந்த மகிழ்ச்சியில் மணப்பாறை மக்களும் பங்கேற்கின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!மணப்பாறைஅரசு கலை அறிவியல் கல்லூரிமு.க.ஸ்டாலின்தமிழக அரசுமதிமுகManapparaiGovernment arts and science collegeMk stalinTamilnadu governmentMDMKONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x